காஷ்மீரில் நடைபெற உள்ள பாஜக பொதுக்கூட்டத்தில் அரசு ஊழியர்கள் கலந்து கொள்ள வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.
மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியை பிடிப்பதில் பாஜக தீவிரம் காட்டி வருகிறது. இதற்காக மாநிலங்கள் முழுவதும் ஆங்காங்கே பாஜக பொதுக்கூட்டங்கள் நடத்தப்பட்டு வரும் நிலையில் பிரதமர் மோடி பாஜக கூட்டங்களில் கலந்து கொண்டு உரையாற்றி வருகிறார்.
அந்த வகையில் மார்ச் 7ம் தேதி பிரதமர் மோடி காஷ்மீரின் ஸ்ரீநகரில் நடைபெற உள்ள பாஜக பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள உள்ளார். ஆர்ட்டிக்கிள் 370 நீக்கத்திற்கு பிறகு முதன்முதலாக பிரதமர் மோடி காஷ்மீருக்கு செல்கிறார். இதனால் அங்கே பாதுகாப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில் பிரதமரின் வருகையையொட்டி அங்கு நடைபெறும் பாஜக பொதுக்கூட்டத்தில் காஷ்மீர் அரசு ஊழியர்களும் கலந்து கொள்ள வேண்டுமென காஷ்மீர் துணைநிலை ஆளுநர் உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அரசு ஊழியர்களை கட்சி கூட்டத்திற்கு வர சொல்வது முறையல்ல என்று எதிர்கட்சிகள் சில இதுகுறித்து பேசி வருகின்றன.
ஆனால் காஷ்மீர் வரும் பிரதமர் மோடி கல்வி, ஊரக மேம்பாடு, இளைஞர்கள் நலத்துறை உள்ளிட்ட 13 துறைகள் சார்ந்த நலத்திட்டங்களையும், இளைஞர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்க உள்ளதாகவும் அதற்காகவே அரசு ஊழியர்கள் அழைக்கப்பட்டுள்ளதாகவும் பாஜக தரப்பில் கூறப்படுகிறது.