சமீபகாலமாக இந்தியாவில் தங்கத்தின் விலை புதிய உச்சங்களை தொட்டு வரும் நிலையில், இந்த விலை உயர்வுக்கு மத்தியில் ஆளும் பாஜக தான் காரணம் என்று சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் கடுமையான விமர்சனத்தை தொடுத்துள்ளார்.
தங்கம் விலை அதிகரிப்பது குறித்து அவர் தனது சமூக ஊடகப் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், "குடிமக்களின் தேவை அதிகரித்ததால் தங்கத்தின் விலை உயரவில்லை. மாறாக, பாஜக உறுப்பினர்கள் தங்கத்தை பதுக்குவதால்தான் இந்த விலை உயர்வு ஏற்படுகிறது" என்று குற்றம் சாட்டியுள்ளார்.
தங்கத்தின் விலை ஏற்றத்திற்குக் காரணமாக அவர் கூறுவது: "பாஜகவினர் தங்கள் கறுப்பு பணத்தை தங்கமாக) மாற்றும் செயல்முறையே இதற்கு காரணம். சர்வதேச சந்தை ஏற்ற இறக்கங்களை கொண்டிருந்தாலும், இந்த விலையுயர்ந்த உலோகங்களின் விலை மட்டும் ஏன் தொடர்ந்து அதிகரிக்கிறது? இதற்கு மத்திய அரசு விளக்கம் அளிக்க வேண்டும்."
அகிலேஷ் யாதவ் மேலும், "ஒரு ஏழை மனிதனால் தன் குடும்ப திருமணங்களுக்கு ஒரு கிராம் தங்கம் கூட கொடுக்க முடிவதில்லை. தங்கம் மட்டுமல்ல, பாஜகவினர் பதுக்குவதால் தற்போது வெள்ளியும் ஏழை மக்களுக்கு எட்டாத விலையில் உள்ளது" என்று வேதனை தெரிவித்தார்.
மேலும் "ட்ரோன்கள், தொலைநோக்கிகள், புல்டோசர்கள் ஆகியவை அரசியல் எதிரிகளுக்கு மட்டும்தானா? தங்கத்தை பதுக்குபவர்களை கண்காணிக்க வேண்டியது இல்லையா?" என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.