கடவுளே சொர்க்கத்தில் இருந்து இறங்கி வந்தாலும் பெங்களூரு டிராபிக்கை இன்னும் ஒரு சில ஆண்டுகளுக்கு எதுவும் செய்ய முடியாது என கர்நாடக மாநில துணை முதலமைச்சர் டி. கே. சிவகுமார் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மிக வேகமாக வளர்ந்துள்ள பெங்களூர் நகரம், மிகப்பெரிய போக்குவரத்து நெரிசல் பிரச்சனைகளால் திணறி வருகிறது. பல்வேறு ஐடி கம்பெனிகள் இருக்கும் இந்த நகரத்தில், டிராபிக் பிரச்சனையை நிரந்தரமாக தீர்க்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், பெங்களூர் மாநகராட்சி ஏற்பாடு செய்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட துணை முதலமைச்சர் டி. கே. சிவகுமார், "கடவுள் சொர்க்கத்திலிருந்து இறங்கி வந்து பெங்களூர் தெருக்களில் நடந்தாலும், ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகளுக்கு டிராபிக் பிரச்சனை மாறாது" என்று இங்கு உள்ள செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
பெங்களூர் நகரத்தின் நிலைமை மிகவும் சவாலானது என்றும், சரியான திட்டமிடல் மற்றும் செயல்படுத்துதல் மட்டுமே இதனை மாற்ற முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார். எதிர்காலத்திற்கான சிறந்த சாலைகளை டிராபிக் இல்லாமல் உருவாக்க, இந்த அரசு முயற்சி செய்து வருகிறது என்றும் தெரிவித்தார்.
சிவகுமாரின் இந்த கருத்தை எதிர்த்து, எதிர்க்கட்சி தலைவர்கள் கடும் விமர்சனம் செய்து வருகின்றனர். "இந்த அரசு தோல்வியுற்றது என்பதே அவரது கருத்து கூறுவதாகவும்" அவர்கள் தெரிவித்து வருகின்றனர்.