iPhone வாங்க காசு இல்லாததால் டெலிவரி பாயை கொன்று ஐஃபோனை திருடிய இருவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் லக்னோவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள நிஷாத்கஞ்ச் காவல் நிலையத்திற்குட்பட்ட மஹாநகர் பகுதியை சேர்ந்தவர் ராம் மிலானின் மகன் பரத் குமார். இவர் இ-கார்ட் நிறுவனமான ஃப்ளிப்கார்ட்டில் டெலிவரி பாயாக பணியாற்றி வந்துள்ளார். சில நாட்களுக்கு முன்பு வேலைக்கு சென்ற பரத் குமார் காணாமல் போனதை தொடர்ந்து அவரது பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர்.
இந்நிலையில் இந்திரா நகர் கால்வாயில் கிடக்கும் ஒரு மூட்டையில் துர்நாற்றம் வீசுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அந்த மூட்டையை எடுத்து பார்த்தபோது அதில் பரத் குமார் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். பரத் குமார் டெலிவரி செய்ய சென்ற சிசிடிவி காட்சிகள் உள்ளிட்ட பல ஆய்வு செய்யப்பட்டது.
அதில் பரத்குமார் கடைசியாக டெலிவரி செய்ய சென்ற ஆகாஷ் என்ற நபரிடமும் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. விசாரணையில் ஆகாஷ் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்த நிலையில், போலீஸ் கெடுபிடி காட்டியதில் ஆகாஷ் உண்மையை ஒப்புக் கொண்டுள்ளார்.
ஆகாஷுக்கு நீண்ட நாட்களாக ஐஃபோன் வாங்க வேண்டும் என்ற ஆசை இருந்துள்ளது. ஆனால் பணம் இல்லை. ஐஃபோனை அடைய ஆசைப்பட்ட அவர் Cash On Delivery முறையில் ஐஃபோனை ஆர்டர் செய்துள்ளார். அதை டெலிவரி செய்ய வந்த பரத் குமாரை, ஆகாஷும் அவரது நண்பரும் சேர்ந்து கொலை செய்து சாக்கு பையில் கட்டி இந்திரா நகர் கால்வாயில் வீசியுள்ளனர். இதுகுறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து மேல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில் ஐஃபோனுக்காக நடந்த இந்த கொலை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Edit by Prasanth.K