9 ஆம் வகுப்பு மாணவியை காதலிக்க வற்புறுதிய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர், அவரது தாயை தேடிவருகின்றனர்.
மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே உள்ள பொட்டுலுப்பட்டியைச் சேர்ந்த மலைராஜா மற்றும் சாவித்திரி தம்பதியரின் 13 வயது மகள் உசிலம்பட்டியில் உள்ள தனியார் பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில், இவர் பள்ளிக்குச் சென்றுவரும்போது, அதே பகுதியைச் சேர்ந்த பன்னீர்செல்வம் மகன் தவக்காசெல்வம், மாணவியை பின்தொடர்ந்து தன்னை காதலிக்க வற்புறுத்தியுள்ளார். இதுகுறித்து மாணவி தன் பெற்றோரிடம் தெரிவித்தார்.
இதனையடுத்து தவக்காசெல்வத்தின் பெற்றோரிடம் மாணவியின் பெற்றோர்கள் புகார் தெரிவித்தனர். ஆனால் தவக்காசெல்வத்தின் தாய் வைரமணி தன்னுடைய மகனை கண்டிக்காமல், காதலுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். இந்நிலையில், திங்கள் கிழமை பள்ளிக்குச் சென்ற மாணவியிடம், திருமணம் செய்துகொள்ளாவிட்டால் கொலை செய்துவிடுவதாக தவக்காசெல்வம் அவரது தாயும் சேர்ந்து மிரட்டியுள்ளனர். இது தொடர்பாக, சாவித்ரி அளித்த புகாரின் பேரில் உசிலம்பட்டி தாலுகா காவல்துறையினர், தவக்காசெல்வத்தை கைது செய்தனர். தலைமறைவாக இருக்கும் அவரது தாய் வைரமணியைத் தேடிவருகின்றனர்.