வங்கக்கடலில் உருவான ஃபானி புயல் இன்று காலை 10 மணி அளவில் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் முன்னதாகவே காலை 8 மணிக்கு கரையை கடக்க தொடங்கியது. இந்த புயலின் தாக்கம் ஒடிஷாவில் 11 மணி வரை இருக்கும் என்பதால் அங்கு பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது
ஒடிஷாவின் புரி, கோபால்பூர் பகுதியில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருவதாக ஒடிஷா வானிலை மையம் அறிவித்துள்ளது. மேலும் ஃபானி புயலால் பாதிக்கப்படும் பகுதிகளில் இருந்து 10 லட்சம் பேர் முன்னெச்சரிக்கையாக வெளியேற்றப்பட்டு பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களுக்கு தேவையான உணவுக்காக 5,000 சமையல் கூடங்களில் உணவு தயாரிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஃபானி புயலால் ஒடிசா மாநிலம் புரியில் 142 கி.மீ முதல் 174 கி.மீ. வரை காற்று வீசி வருவதாகவும், கடந்த 43 ஆண்டுகளில் இதுபோன்ற வலுவான புயல் ஒன்று உருவாகி கரையை கடந்ததில்லை என்றும், தமிழகத்தை தாக்கிய கஜா, வர்தா புயல்களை விட அதிக வலிமையான புயலாக ஃபானி இருப்பதாகவும் வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் ஃபானி புயல் பாதிப்புகளுக்கு உதவிகள் பெற 1938 என்ற உள்துறை அமைச்சகத்தின் உதவி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
ஃபானி புயல் ஒடிஷாவில் கரையை கடந்தாலும் இதன் தாக்கம் ஆந்திர மாநிலத்திலும் எதிரொலித்துள்ளது. இதனையடுத்து ஆந்திராவில் உள்ள கலிங்கப்பட்டினம், பீமுனிபட்டினம் துறைமுகங்களில் 10ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டும், விசாகப்பட்டினம், கங்காவரம் துறைமுகங்களில் 8ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டும் ஏற்றப்பட்டுள்ளது