கர்நாடக மாநில அரசு தயாரித்து விற்பனை செய்யும் மைசூர் சாண்டல் சோப் போன்றே போலியாக தயாரித்து கடந்த 10 ஆண்டுகளாக விற்பனை செய்யப்பட்டு வந்திருப்பதாகவும் இதன் மூலம் 500 முதல் 600 கோடி ரூபாய் வரை போலி நபர்கள் வியாபாரம் செய்திருப்பதாகவும் செய்திகள் வெளியாகி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தென்னிந்தியாவில் மிகவும் பிரபலமான மைசூர் சாண்டல் சோப். கடந்த 1916 ஆம் ஆண்டு முதல் கர்நாடகா அரசு இந்த சோப்பை தயாரித்து தென்னிந்திய முழுவதும் விற்பனை செய்து வருகிறது.
இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக மைசூர் சாண்டில் போலி சோப் நடமாடுவதாக தகவல் வெளியானது அடுத்து இதுகுறித்து காவல்துறையினர் ஆய்வு செய்தனர். போலி சோப் தயாரிக்கும் தொழிற்சாலையை அரசு அதிகாரிகள் கண்டுபிடித்து வியாபாரி போல் சென்று சோப்பை வாங்கி வந்து சோதனை செய்து பார்த்தபோது அதில் உயர்தர சந்தன எண்ணெய் இல்லை என்றும் புற்றுநோயை உண்டாக்கும் பொருள்கள் இருப்பதையும் உறுதி செய்தனர்.
இதனை அடுத்து அதிரடியாக போலி சோப் தயாரிக்கும் நிறுவனம் சோதனை செய்யப்பட்டு இது தொடர்பாக சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் கடந்த 10 ஆண்டுகளில் 500 முதல் 600 கோடி வரை லாபம் ஈட்டி இருப்பதாக கூறப்படுகிறது. இந்த சோப் தயாரிப்பின் பின்னணி யார் என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.