ஏக்நாத் ஷிண்டே மகாராஷ்டிரா மாநில முதல்வராக வேண்டுமென்றால், அவரது கட்சியை பாஜகவுடன் இணைய வேண்டும் என்று அமைச்சர் அமித்ஷா நிபந்தனை விதித்ததாக ஒரு செய்தி சமூக வலைதளங்களில் பரபரப்பாக பரவி வருகிறது.
சமீபத்தில் மத்திய அமைச்சர் அமித்ஷா புனே வந்திருந்தபோது, அவரை ஏக்நாத் ஷிண்டே சந்தித்ததாகவும், தான் முதல்வராக இருந்த காலத்தில் முன்வைத்த திட்டங்கள் அனைத்தும் தற்போது நிறுத்தப்பட்டுள்ளதாகவும், தனக்கு மரியாதை இல்லை என்று குற்றம் சாட்டியதாகவும் கூறப்படுகிறது.
மேலும், தனக்கு முதல்வர் பதவி வேண்டும் என்று அவர் கூறியபோது, பாஜக 125 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கும் நிலையில் வேறொரு கட்சிக்கு எப்படி முதல்வர் பதவி கொடுக்க முடியும். வேண்டுமென்றால், உங்கள் கட்சியை பாஜகவுடன் இணைத்து விடுங்கள்; அதன் பிறகு முதல்வர் பதவி குறித்து பேசலாம் என்று அமித்ஷா கூறியதாகவும் செய்திகள் வெளியாகி வருகின்றன.
ஆனால், இந்த செய்தியை ஏக்நாத் ஷிண்டே மறுத்துள்ளார். "புனே வந்தபோது அமித்ஷாவை சந்தித்து பேசவே இல்லை" என்றும் அவர் கூறியுள்ளார். அதே நேரத்தில், முதல்வர் பதவி ஆசை இன்னும் ஏக்நாத் ஷிண்டேவுக்கு இருப்பதாகவும், அதற்கான நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.