ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டதை அடுத்து, பொதுமக்கள் அச்சத்துடன் சாலையில் நிற்பதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஆந்திர மாநிலத்தில் உள்ள விஜயவாடா, விசாகப்பட்டினம் உள்ளிட்ட சில இடங்களிலும், தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஹைதராபாத்தில் இன்று காலை திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. அதன் அளவு 5.3 ரிக்டர் என பதிவானதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், நிலநடுக்கம் ஏற்பட்டவுடன் வீடுகளில் இருந்த பொருட்கள் கீழே சிதறி விழுந்ததாகவும், சில வீடுகளில் சுவரில் விரிசல் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால், பொதுமக்கள் உயிருக்கு பயந்தபடி அலறி அடித்து, வீட்டில் இருந்து வெளியே வந்து சாலையில் தஞ்சம் அடைந்துள்ளனர்.
நிலநடுக்கத்தால் இதுவரை எந்தவித உயிர்சேதமும் ஏற்படவில்லை என்றும், ஆனால் அதே நேரத்தில் மக்கள் அச்சமடைந்து இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. தெலுங்கானா மாநிலத்தில் பல பகுதிகளில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டதாக பொதுமக்கள் அதிர்ச்சியுடன் கூறி வருகின்றனர்.