ஹமாஸ் அமைப்பினர் கடத்தி சென்ற இஸ்ரேல் பணயக் கைதிகளை விடுவிக்க முன்னாள் அமெரிக்க அதிபரான டொனால்டு ட்ரம்ப் காலக்கெடு விதித்துள்ளார்.
கடந்த ஆண்டு அக்டோபரில் இஸ்ரேலுக்குள் நுழைந்த ஹமாஸ் கும்பல் பலரை சுட்டுக் கொன்றதுடன், பணயக்கைதிகளாகவும் பலரை பிடித்துச் சென்றது. அதை தொடர்ந்து ஹமாஸ் படையினர் ஆதிக்கம் செலுத்தும் காசா மீது இஸ்ரேல் தாக்குதலை தொடங்கியது. இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் காசாவில் 44 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர்.
இஸ்ரேலில் இருந்து ஹமாஸ் கடத்திச் சென்ற 251 பேரில் அமெரிக்கர்களும் அடக்கம். இந்நிலையில் இதுவரை இஸ்ரேல் 117 பணையக் கைதிகளை உயிருடன் மீட்டுள்ளது. ஹமாஸ் வசம் இன்னும் 101 பணையக் கைதிகள் இருப்பதாக இஸ்ரேல் தெரிவித்துள்ள நிலையில் அதில் 33 பேர் கொல்லப்பட்டுவிட்டதாக ஹமாஸ் ஆயுதக்குழு தெரிவித்துள்ளது.
இந்நிலையில் தற்போது அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப், ஹமாஸ் ஆயுதப்படைக்கு பணையக்கைதிகளை விடுவிக்க கெடு விதித்துள்ளார். ஹமாஸை எச்சரித்து பேசியுள்ள அவர் “நான் ஜனாதிபதியாக பதவியேற்க உள்ள ஜனவரி 20ம் தேதிக்கு முன்பு பணய கைதிகளை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். நான் ஜனாதிபதி ஆன பிறகும் பணைய கைதிகள் விடுதலை செய்யப்படவில்லை என்றால் அதற்கு காரணமானவர்கள் அமெரிக்க வரலாற்றில் இதுவரை காணாத கடுமையான தாக்குதலை எதிர்கொள்ள நேரிடும்” என தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் - ஹமாஸ் இடையே தொடர்ந்து போர் நடந்து வரும் நிலையில் இஸ்ரேலுக்கு ஆயுத உதவிகள் செய்து வரும் அமெரிக்கா இதுவரை நேரடியாக போரில் இறங்காமல் இருந்து வந்தது. ஆனால் ட்ரம்ப் வந்தபிறகு இந்த நிலை மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Edit by Prasanth.K