கேரள அமைச்சர் ஒருவர் கழுதைக்கும் இருக்கும் கருணை கூட ஐயப்பன் கோவிலில் இருக்கும் தந்திரிக்கு இல்லை என்று கூறி சர்ச்சையில் சிக்கியுள்ளார். இவருக்கு கண்டனங்கள் குவிந்து வருகிறது.
கேரளாவில் உள்ள ஆலப்புழா நகரில் நடைபெற்ற கலாசார விழாவில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றிய கேரள பொதுப்பணித் துறை அமைச்சர் சுதாகரன் பேசியதாவது: சபரிமலையில் உள்ள கழுதைகள் தினமும் கடினமான பணிகளை செய்து வருகிறது. ஆனால் ஒருநாள் கூட அந்த கழுதைகள் போராட்டம் நடத்தியதில்லை. கடுமையான பணிக்குப் பின் பம்பை நதிக்கரையில் கழுதைகள் ஓய்வெடுக்கின்றது. அவற்றுக்கு இருக்கும் கருணைகூட ஐயப்பன் மீது சபரிமலை கோயில் தந்திரிக்கு இல்லை என்று சுதாகரன் சர்ச்சையான கருத்தை தெரிவித்தார்.
கேரள பொதுப்பணித் துறை அமைச்சர் சுதாகரனின் இந்த கருத்துக்கு சபரிமலை தந்திரிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அமைச்சர் தனது கருத்தை வாபஸ் பெற்று மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தி வருவதாக கேரள ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன
இந்த நிலையில் சபரிமலையில் அமைதி திரும்பவும் அதன் புனிதத் தன்மை காக்கப்படவும் இந்த விவகாரத்தில் ஆளுநர் சதாசிவம் தலையிட வேண்டும் என பாஜக தரப்பினர் கோரிக்கை வைத்துள்ளனர்.