கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கொல்கத்தாவில் பயிற்சி மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், தற்போது அந்த குற்றவாளிகளுக்கு ஜாமீன் கிடைத்துள்ளது. இதை அடுத்து மீண்டும் மருத்துவர்கள் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கொல்கத்தாவில் பெண் மருத்துவர் ஒருவர் கடந்த ஆகஸ்ட் மாதம் கல்லூரி வளாகத்தில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் கல்லூரியின் முன்னாள் முதல்வர் சந்திப் போஸ் மற்றும் முன்னாள் காவல்துறை அதிகாரி அபிஜித் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இந்த நிலையில் 90 நாட்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டிய நிலையில், சிபிஐ தாமதம் செய்ததால் இருவருக்கும் ஜாமீன் கிடைத்தது. இது மருத்துவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், கொல்கத்தாவில் உள்ள ஐந்து மருத்துவ சங்கங்கள் டிசம்பர் 26 வரை 10 நாட்களுக்கு போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. "போக்குவரத்திற்கு இடையூறு இன்றி அமைதியான முறையில் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம் என்றும், சட்டத்துக்கு உட்பட்டு விதிகளை பின்பற்றி எங்கள் போராட்டம் இருக்கும்" என்றும் மருத்துவ சங்கங்கள் தெரிவித்துள்ளன.
"பத்து நாட்கள் போராடுவதற்கு கொல்கத்தா ஆணையரிடம் அனுமதி கேட்டு உள்ளோம். சிபிஐ இந்த வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும்" என்ற கோரிக்கையை வலியுறுத்தி மருத்துவர்கள் போராட்டம் செய்யப் போவதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.