திருப்பதி ஏழுமலையானின் தரிசனத்துக்கு அடுத்த படியாக லட்டு பிரசாதத்துக்கு பக்தர்கள் முக்கியத்துவம் அளிக்கின்றனர்.
திருப்பதி பிரம்மோற்சவம் நிறைவு பெற்றதும் தேவஸ்தான ஊழியர்களுக்கு லட்டு, வடைகளை இலவசமாக வழங்குவது வழக்கம்.
இந்நிலையில், நேற்று மடப்பள்ளி அருகே லட்டு தட்டுகள் ஆம்புலன்ஸில் வந்து இறங்கின. இதைக்கண்ட பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
மேலும், பக்தர்கள் பக்தியுடன் வாங்கி செல்லும் லட்டு பிரசாதத்தை ஊழியர்கள் அலட்சியமாக கையாண்டு வருகின்றனர் என தேவஸ்தான் உயர் அதிகாரிகளிடம் புகார் அளித்தனர்.
இது குறித்து விசாரணை நடத்திய பின்னர் தேவஸ்தான அதிகாரிகள் பின்வருமாறு கூறியுள்ளனர், திருப்பதியில் உள்ள சுவிம்ஸ் மருத்துவமனையில் பணியாற்றும் ஊழியர்களுக்கு லட்டு பிரசாதம் அனுப்பி வைக்கப்பட்டது. லட்டு ஊழியர்களுக்கு அளிக்கப்பட்ட பின்பு காலி தட்டுக்கள் ஆம்புலன்ஸ்களில் திருமலைக்கு அனுப்பி வைக்கப்பட்டன என கூறியுள்ளனர்.
ஆனால், இந்த பதிலை ஏற்றுக்கொள்ள முடியாத பக்தர்கள் இது தேவஸ்தானத்தின் அலட்சியமான போக்கை காட்டுகிறது என்று வேதனையடைந்துள்ளனர்.