ஆம் ஆத்மி ஒரு சிறிய கட்சி, தொடங்கி 10 ஆண்டுகள் தான் ஆகின்றன, ஆனால் இந்த சிறிய கட்சியை தீர்த்து கட்டும் முயற்சியை பிரதமர் மோடி நிறுத்தவில்லை என இன்று நடைபெற்ற பிரமாண்டமான வாகன பேரணியின்போது டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பேசினார்.
மேலும் ஒரே நேரத்தில் ஆம் ஆத்மி கட்சியின் 4 முக்கிய தலைவர்களை சிறையில் அடைத்துள்ளனர் என்றும், ஆனால் ஆத் ஆத்மி கட்சியின் பலம் பல மடங்கு அதிகரித்து உள்ளது என்றும், தேசத்தின் மிகப்பெரிய ஊழல்வாதிகளை பாஜகவில் இணைத்து வருகின்றனர் என்றும், ஆனால் தான் ஊழலுக்கு எதிராக போராடி வருவதாக பிரதமர் மோடி பேசி வருகிறார் என்றும் அரவிந்த் கெஜ்ரிவால் பேசினார்.
நாட்டையும், மக்களையும் காப்பாற்ற வேண்டும் என பிச்சை எடுக்க வந்திருக்கிறேன் என கூறிய அரவிந்த் கெஜ்ரிவால், எனக்கு கிடைத்துள்ள நேரத்தில் நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்வேன், என் ஒவ்வொரு துளி ரத்தத்தையும் நாட்டு மக்களுக்கு சிந்தத் தயார் என்று கூறினார்.
மேலும் இந்தியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் யார்? என்று கேட்கிறார்கள், பாஜக கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் யார்? என்று நான் கேட்கிறேன். பிரதமர் மோடியும் அரசியலில் இருந்து ஓய்வுபெற உள்ளார், மோடி ஓய்வு பெற்றால் அவரது உத்தரவாதத்தை பூர்த்தி செய்யப் போவது யார்?
ஜூன் 4ஆம் தேதிக்கு பிறகு பாஜக ஆட்சி இருக்கப் போவதில்லை, முதலமைச்சர் பதவி மீதும், பிரதமர் பதவி மீதும் எனக்கு ஆசை இல்லை என்று டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் பேசினார்,