குடியுரிமை சட்டத்திற்கு எதிராக டெல்லியில் நடைபெற்ற போராட்டத்தில் மீண்டும் கலவரம் ஏற்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மத்திய அரசின் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் மாணவர்கள், பொதுமக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு டெல்லி மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் கலவரம் ஏற்பட்டதும், போலீஸார் தடியடி நடத்தியதும் தேசிய அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
அதை தொடர்ந்து பல கல்லூரிகள், பல்கலைகழகங்களை சேர்ந்த மாணவர்கள், அரசியல் கட்சிகள் பல்வேறு இடங்களில் போராடி வருகின்றனர். இந்நிலையில் டெல்லியில் சீலாம்பூர் பகுதியில் நடைபெற்ற போராட்டத்தை போலீஸார் அடக்க முயன்றபோது கலவரம் வெடித்தது. இதில் போராட்டக்காரர்களும் போலீஸை எதிர்த்து தாக்க நிலவரம் மேலும் சிக்கலாகியுள்ளது. சீலாம்பூர் தெருக்களில் போராட்டக்காரர்களும், காவலர்களும் மோதி கொள்ளும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.
இந்த சம்பவத்தில் சாலையில் சென்ற பல வாகனங்கள் அடித்து நொறுக்கப்படுள்ளன. கலவரம் குறித்து வெளியாகியுள்ள வீடியோ ஒன்றில் பள்ளி வாகனம் ஒன்று கலவரத்தில் சிக்கியுள்ளதாகவும், அதில் குழந்தைகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது. அந்த குழந்தைகளுக்கு என்ன ஆனது என்பது குறித்து தெரியவரவில்லை. இந்த சம்பவம் நாடு முழுவதும் மேலும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
தொடர்ந்து இதுபோன்ற கலவரங்கள் நாடு முழுவதும் ஏற்பட்டால் நாடு பல்வேறு விளைவுகளை சந்திக்க நேரிடும் என அரசியல் நிபுணர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.