நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்களை மேலாண்மை செய்யும் பல்கலைக்கழக மானியக் குழு போலி பல்கலைக்கழகங்கள் குறித்த பட்டியலை வெளியிட்டுள்ளது.
நாடு முழுவதும் ஏராளமான பல்கலைக்கழகங்கள் செயல்பட்டு வரும் நிலையில் அதில் பல மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த பல்கலைக்கழகங்கள் மத்திய பல்கலைக்கழக மானியக் குழுவால் அங்கீகரிக்கப்பட்டிருக்க வேண்டியது அவசியம். அப்போதுதான் அவர்கள் வழங்கும் பட்டங்கள் செல்லுபடியாகும்.
இந்நிலையில் யுஜிசி அனுமதி பெறாமல் இயங்கி வரும் 20 பல்கலைக்கழகங்களின் பட்டியலை யுஜிசி வெளியிட்டுள்ளது. அதில் டெல்லியில் மட்டுமே 8 பல்கலைக்கழகங்கள் உள்ளன, உத்தர பிரதேசத்தில் 4 பல்கலைக்கழகங்கள் உள்ளது.
அந்த பட்டியலில் அகில இந்திய பொது மற்றும் உடல்நல அறிவியல் நிறுவனம், வர்த்தக பல்கலைக்கழகம், தொழிற்கல்வி பல்கலைக்கழகம், ஏடிஆர் மத்திய நீதித்துறை பல்கலைக்கழகம் ஆகிய பல பல்கலைக்கழகங்கள் இடம்பெற்றுள்ளன. இந்த பல்கலைக்கழகங்களில் படிக்கும் மாணவர்கள் பெறும் பட்டங்கள் செல்லாது என யுஜிசி அறிவித்துள்ளது மாணவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.