பிரதமர் மோடி இன்று திரிவேணி சங்கமத்தில் புனித நீராடிய நிலையில், பிரயாக்ராஜ் முழுவதும் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள பிரயாக்ராஜில் கடந்த சில நாட்களாக மகா கும்பமேளா நிகழ்ச்சி நடைபெற்று வருகின்றது. கோடிக்கணக்கான பக்தர்கள் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி வருகின்றனர். இதுவரை சுமார் 38 கோடி பக்தர்கள் புனித நீராடி உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், இன்று திரிவேணி சங்கமத்தில் பிரதமர் நரேந்திர மோடி புனித நீராட இருப்பதாக கூறப்பட்டது. இதனைத் தொடர்ந்து, அவர் இன்று காலை டெல்லியில் இருந்து வந்து, திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினார். அப்போது, அவருடன் உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் புனித நீராடினார்.
பிரதமர் மற்றும் முதல்வர் வருகை காரணமாக, பிரயாக்ராஜ் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. ஏற்கனவே, நேற்று பூட்டான் மன்னர் புனித நீராடியதாகவும், உலகின் பல முன்னணி விஐபிகள் தொடர்ந்து திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இந்த மகா கும்பமேளா ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இன்னும் லட்சக்கணக்கான பக்தர்கள் புனித நீராட பிரயாக்ராஜுக்கு குவிந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.