பாலியல் பலாத்கார வழக்கில் நேரில் ஆஜராகாத நித்யானந்தாவிற்கு பிடிவாரண்டு பிறப்பித்து நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
கர்நாடக மாநிலம் ராமநகர் மாவட்டம் பிடதியில் நித்யானந்தா சாமியாரின் ஆசிரமம் உள்ளது. நித்யானந்தா மீது, அவருடைய ஆசிரமத்தில் இருந்த பெண் சீடரான ஆர்த்தி ராவ் என்பவர் பிடதி காவல் நிலையத்தில் கற்பழிப்பு புகார் கொடுத்தார். மேலும் அவர் மீது கொலை மிரட்டல் புகாரும் அளிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் தன் மீதான வழக்குகள் வேண்டுமென்றே தன் நற்பெயரை கெடுப்பதற்காக போடப்பட்டதால், அனைத்து வழக்குகளையும் தள்ளுபடி செய்ய நிதியானந்தா சார்பில் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டது. இந்த மனுவை அதிரடியாக தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம் வழக்கை ராமநகர் மாவட்ட நீதிமன்றம் விசாரிக்குமாறு உத்தரவிட்டது.
கடந்த ஜூன் மாதத்தில் இருந்து நித்யானந்தா மீதான குற்றச்சாட்டுகளை, ராமநகர் நீதிமன்றம் விசாரித்து வருகிறது. கடந்த ஜூன் மாதம் 6-ந் தேதி ஒரு முறை மட்டும் நித்யானந்தா விசாரணைக்கு நேரில் ஆஜரானார். அதன்பின்னர் 2 முறை நடைபெற்ற விசாரணைக்கு அவர் ஆஜராகவில்லை.
இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது, நித்யானந்தாவின் வழக்கறிஞர் நித்யானந்தா வடமாநிலங்களில் ஆன்மிக சுற்றுப்பயணத்தில் ஈடுபட்டுள்ளதால், அவரால் விசாரணைக்கு ஆஜராக முடியவில்லை என்று நீதிபதியிடம் தெரிவித்தார்.
இதனைக்கேட்டு கோபமடைந்த நீதிபதி நித்யானந்தாவுக்கு பிடிவாரண்டு பிறப்பித்து அதிரடி உத்தரவு பிறப்பித்தார். இதனையடுத்து போலீஸார் நித்யானந்தாவை கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.