Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

10 கோடி ரூபாய் மதிப்புள்ள அத்தியாவசியப் பொருட்களை அனுப்பி வைத்திட ஒப்புதல் வழங்கிடக் கோரி மணிப்பூர் முதல்வருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்

10 கோடி ரூபாய் மதிப்புள்ள அத்தியாவசியப் பொருட்களை அனுப்பி வைத்திட ஒப்புதல் வழங்கிடக் கோரி மணிப்பூர் முதல்வருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
, செவ்வாய், 1 ஆகஸ்ட் 2023 (12:56 IST)
மணிப்பூரில் தற்போது நிலவி வரும் சூழ்நிலை காரணமாக பாதிக்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்கியுள்ள மக்களுக்கு உதவிடும் பொருட்டு 10 கோடி ரூபாய் மதிப்புள்ள அத்தியாவசியப் பொருட்களை அனுப்பி வைத்திட ஒப்புதல் வழங்கிடக் கோரிமணிப்பூர் மாநில முதலமைச்சர் பைரேன் சிங்குக்கு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின்  கடிதம் எழுதியுள்ளார்.

அதில், ‘’மணிப்பூரில் தற்போது நிலவிவரும் சூழ்நிலையில் நிவாரண முகாம்களில் தங்கியுள்ள பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கிடும் வகையில் அத்தியாவசியப் பொருட்களை அனுப்பி வைத்திட ஒப்புதல் வழங்கிடக் கோரி மாண்புமிகு மணிப்பூர் மாநில முதலமைச்சர் அவர்களுக்கு, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் நேற்று (31.7.2023) கடிதம் எழுதியுள்ளார்.

அக்கடிதத்தில், மணிப்பூரில் உள்ள தமிழர்களுக்கு அளித்து வரும் ஆதரவுக்கு நன்றி தெரிவித்துள்ள மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், அவர்களின் உயிருக்கும் உடமைக்கும் தொடர்ந்து பாதுகாப்பு அளிக்குமாறு தனது கடிதத்தில் கேட்டுக்கொண்டுள்ளார்.

தற்போதைய சூழ்நிலையின் காரணமாக 50,000-க்கும் மேற்பட்ட மக்கள் நிவாரண முகாம்களில் தங்கியுள்ளதாகவும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு சில அத்தியாவசிய பொருட்களின் தேவை அதிகரித்து வருவதாகவும் தனது கவனத்திற்கு வந்ததாகத் தெரிவித்துள்ள மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள். இந்த இக்கட்டான நேரத்தில், சுமார் 10 கோடி ரூபாய் மதிப்பிலான தார்பாலின் விரிப்புகள், படுக்கை விரிப்புகள், கொசுவலைகள், அத்தியாவசிய மருந்துகள், சானிட்டரி நாப்கின்கள் மற்றும் பால் பவுடர் போன்ற தேவையான நிவாரணப் பொருட்களை வழங்குவதன் மூலம் மணிப்பூர் மாநிலத்திற்கு உதவிகளை வழங்கிடத் தமிழ்நாடு அரசு தயாராக உள்ளது என்றும் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

இந்த பொருட்கள் முகாம்களில் தங்கியுள்ள மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் எனவும் தேவைப்பட்டால் அவற்றை விமானம் மூலம் அனுப்பிவைத்திட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

இந்த மனிதாபிமான உதவிக்கு மணிப்பூர் மாநில அரசின் ஒப்புதலை வழங்குமாறு தாம் கேட்டுக்கொள்வதாகவும், மேலும், இது தொடர்பாக எடுக்கப்படவேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து தெரியப்படுத்தவும் கோரியுள்ளார். இதன் மூலம் தமிழ்நாடு அரசின் அதிகாரிகள் மணிப்பூர் மாநில அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து பணிகளை மேற்கொண்டு நிவாரணப் பொருட்களை விரைவாக அனுப்ப இயலும்’’ என்று தெரிவித்துள்ளார்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தமிழகத்தின் 7 துறைமுகங்களில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு: மீனவர்களுக்கு எச்சரிக்கை..!