ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் தன்னை கைது செய்யாமல் இருக்க முன்ஜாமீன் கோரி டெல்லி ஐகோர்ட்டில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் மீண்டும் சுப்ரீம் கோர்ட்டில் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை அவசர மனுவாக விசாரணை செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்த நிலையில் சுப்ரீம் கோர்ட் நீதிபதி இந்த மனுவை விசாரணை செய்ய மறுத்து, தலைமை நீதிபதிக்கு அனுப்பினார். தலைமை நீதிபதி நேற்று முன் தினம், அயோத்தி வழக்கில் பிசியாக இருந்ததால் இந்த மனு 23ஆம் தேதி விசாரணைக்கு எடுத்து கொள்வதாக அறிவித்திருந்தார்.
இதனையடுத்து டெல்லி ஐகோர்ட்டில் முன் ஜாமீன் ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து ப.சிதம்பரம் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது. சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை தொடர்பான இரு வழக்குகளும் இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஆனால் அதே நேரத்தில் இந்த மனு விசாரணைக்கு வருவதற்கு முன்னரே ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டுள்ளதால் இந்த மனுவின் விசாரணைக்கு அவசியம் இல்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. எனவே ப.சிதம்பரம் தரப்பில் முன்ஜாமீன் மனுவுக்கு பதில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது