சத்தீஸ்கரை சேர்ந்த பாஜக எம்.எல்.ஏ ஒருவர் மதுபானத்திற்கு பதிலாக கஞ்சா அடிக்கலாம் என பரிந்துரைத்து பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சத்தீஸ்கரில் காங்கிரஸ் ஆட்சி நடந்து வரும் நிலையில் முதல்வராக பூபேஷ் பாகல் பதவி வகித்து வருகிறார். சத்தீஸ்கரின் ராய்ப்பூரில் பாஜக சார்பில் நேற்று கூட்டம் ஒன்று நடைபெற்றுள்ளது.
அதில் பேசிய மஸ்தூரி தொகுதி எம்.எல்.ஏ கிருஷ்ணமூர்த்தி “காங்கிரஸ் ஆட்சியில் சட்டம், ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. எங்கு பார்த்தாலும் கொலை, பாலியல் வன்கொடுமை அதிகரித்துள்ளது. இதுபோன்ற குற்றங்கள் அதிகரிப்பதற்கு மது அருந்துவதே காரணம். மது குற்றம் செய்ய மனிதர்களை தூண்டுகிறது.
ஆனால் கஞ்சா புகைப்பவர்களுக்கு இத்தகைய எண்ணங்கள் ஏற்படுவதில்லை. எனவே மதுவை முற்றிலுமாக ஒழித்து கஞ்சா புழக்கத்திற்கு அரசு அனுமதி அளிக்க வேண்டும். இதுகுறித்து நான் சட்டமன்றத்திலும் பேசியுள்ளேன்” என கூறியுள்ளார்.
அவரது இந்த பேச்சு சர்ச்சையான நிலையில் இதற்கு பதில் அளித்துள்ள சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகல் “இந்தியாவில் கஞ்சாவை சட்டபூர்வமாக்க வேண்டும் என்று விரும்பினால் அவர் மத்திய பாஜக அரசுக்கு தனிப்பட்ட முறையில் கோரிக்கை விடுக்கட்டும்” என்று கூறியுள்ளார்.