தெலுங்கானா மாநிலத்தில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான சிறுமியின் வீடியோவை பாஜக எம்.எல்.ஏ வெளியிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கானாவின் ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் உள்ள தனியார் க்ளப் ஒன்றிற்கு கடந்த 28ம் தேதி சென்றுவிட்டு திரும்பிய 17 வயது சிறுமியை 5 பேர் காரில் கடத்தி சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதில் இரண்டு பேர் மைனர் சிறுவர்கள் என கூறப்படுகிறது. மேலும் இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் தெலுங்கானாவில் ஆளும் ராஷ்டிரிய சமிதி கட்சியின் தோழமை கட்சியான ஏஐஎம்ஐஎம் கட்சிக்கு நெருக்கமானவர்கள் என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த வழக்கில் மைனர் சிறுவன் ஒருவருக்கு தொடர்பில்லை என அவரை விடுவிக்க முயன்றதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் பாஜக எம்.எல்.ஏ ரகுநந்தன் ராவ் சில வினாடிகள் ஓடக்கூடிய வீடியோவை இரண்டு தினங்களுக்கு முன் ஷேர் செய்துள்ளார். அதில் குற்றத்தில் சம்பந்தமில்லை என்று கருதப்பட்ட சிறுவன் உள்ளதை சுட்டிக் காட்டியுள்ளார்.
ஆனால் குற்றம் சாட்டப்பட்டவர் மற்றும் பாதிக்கப்பட்டவர் இருவரும் மைனராக உள்ள நிலையில் அவர்களது அடையாளத்தை வெளியிட்டதற்காக பாஜக எம்.எல்.ஏ ரகுநந்தன் மீது ஐதராபாத் போலீஸார் இந்திய தண்டனை சட்டம் 228ஏ பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அவரது இந்த செயலுக்கு பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.