ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு, பாஜகவின் மூத்த தலைவரான அமித்ஷாவை கொல்ல முயற்சி செய்ததாக ஆந்திர மாநிலத்தின் பாஜக தலைவர் கண்ணா லட்சுமி நாராயணா தெரிவித்துள்ளார்.
திருப்பதியில் வைத்து அமித்ஷாவை கொல்ல திட்டம் தீட்டப்பட்டதாக கூறி இதனை கண்டித்து நேற்று தர்ணா போராட்டம் நடைபெற்றது. அதில் ஆந்திர பாஜக தலைவர் பின்வருமாறு பேசினார். சந்திரபாபு நாயுடு அரசை பற்றி யாரேனும் கேள்வி கேட்டால் அவர்களுக்கு எதிராக போலீஸார் வழக்கு பதிவு செய்கின்றனர்.
நாயுடு அரசு எல்லாவகையிலும் ஊழலில் ஈடுபட்டுள்ளது. ஊழல் விவகாரத்தை எழுத 300 பக்கங்கள் போதாது. திருப்பதி கோயிலில் அமித்ஷா சாமி கும்பிட வந்திருந்தார். அப்போது ஆந்திரத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கக் கோரி தெலுங்கு தேச கட்சியினரை வைத்து போராட்டம் நடத்தினார்.
அப்போது அமித்ஷாவின் வாகனத்தின் மீது கல் வீசப்பட்டதை அனைவரும் பார்த்தனர். போராட்டம் என்ற பெயரில் அவரை படுகொலை செய்ய சந்திரபாபு நாயுடு திட்டமிட்டார் என பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.