கருக்கலைப்பு செய்யும் கால அளவை இனி 24 வாரங்கள் என மாற்றியமைக்க மத்திய அரசு ஒத்துக் கொண்டுள்ளது.
இந்தியாவில் நடைமுறையில் உள்ள 1971 ஆம் ஆண்டு கருக்கலைப்பு சட்டத்தின் படி கருவினைக் கலைக்க அதிகபட்ச கால அளவு 20 வார காலமாகும். அதாவது 5 மாதம். அதற்கு மேல் கருவினைக் கலைத்தால் அது சட்ட விரோத குற்றமாகும். ஒரு வேளை கருவில் இருக்கும் குழந்தைக்கு ஏதேனும் பிரச்சனை இருந்தால் கூட கலைக்க முடியாது. இந்த கருக்கலைப்புச் சட்டம்தான் 50 ஆண்டுகளாக நடைமுறையில் உள்ளது.
இதை எதிர்த்து அனுஷ்கா ரவீந்திரா என்பவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அவரது மனுவில் பாலியல் வல்லுறவு மூலம் உருவாகும் கரு, பிரச்சனைகளுடன் இருக்கும் கரு ஆகியவற்றைக் கலைக்க இந்த கால அளவு போதாது எனக் கூறி அதற்கு மேல் இருந்தாலும் கலைக்க உத்தரவிடவேண்டும் என கூறியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் இதற்கான நிரந்தர தீர்வுகளை வழங்க வேண்டும் என மத்திய சுகாதாரம், குழந்தைகள் மற்றும் மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் மற்றும் இந்திய மருத்துவ கவுன்சல் ஆகிய துறைகளை வற்புறுத்தியது. இதையடுத்து இப்போது மத்திய அமைச்சரவை இந்த திருத்தத்துக்கு ஒப்புக்கொண்டுள்ளது.
இந்த திருத்தத்தின் மூலமாக அதிகபட்சமாக 24 வாரங்களுக்குள் கருக்கலைப்பு செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதாவது 6 மாதக் காலம். இந்த சட்டத் திருத்தம் வரும் பிப்ரவரி 1 ஆம் தேதி தாக்கல் செய்யப்படும் பட்ஜெட்டில் தாக்கல் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்டவர்கள், மனநோயாளிகள் ஆகியவர்கள் பயனடைவார்கள் என சொல்லப்படுகிறது.