யூபிஐ (UPI) பணப்பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் விதிக்கப்பட உள்ளதாக வெளியான தகவல் குறித்து மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
இந்தியாவில் பணமதிப்பிழப்பு நீக்கத்திற்கு பின் ஆன்லைன் பரிவர்த்தனை செயலிகளின் பயன்பாடு அதிகரித்தது. பல்வேறு உணவகங்கள், கடைகள், ஷாப்பிங் மால்கள் என அனைத்து வணிக பகுதிகளிலும் ஆன்லைனில் பணம் செலுத்தக்கூடிய கியூஆர் கோடு பலகைகள் வைக்கப்பட்டன.
இந்தியா முழுவதும் கூகிள் பே. போன் பே, பேடிஎம் உள்ளிட்ட பல ஆன்லைன் பண பரிவர்த்தனை செயலிகள் மூலமாக அன்றாடம் மக்கள் பல பரிவர்த்தனைகளை மேற்கொள்கின்றனர். சிங்கிள் டீ குடிப்பது தொடங்கி பெரிய அளவிலான தொகையை அனுப்புவது இந்த செயலிகள் பயன்படுத்தப்படுகின்றன.
இந்நிலையில் இந்த பண பரிவர்த்தனை செயலிகள் மூலம் பணம் அனுப்புவதற்கு குறிப்பிட்ட அளவு கட்டணம் விதிக்கலாமா என்று ரிசர்வ் வங்கி ஆலோசித்து வருவதாக வெளியான தகவல்கள் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் இதுகுறித்து தற்போது விளக்கம் அளித்துள்ள மத்திய அரசு “யுபிஐ சேவை பொதுமக்களுக்கும், பொருளாதார வளர்ச்சிக்கும் சிறந்த பங்களிப்பை வழங்கி வருகிறது. யுபிஐ சேவைக்கு கட்டணம் வசூலிக்கும் திட்டம் அரசுக்கு இல்லை. யுபிஐ சேவை வழங்குவோர் சந்திக்கும் செலவுகளை அரசு வேறு வழியில் மீட்கும். பயனாளர்கள் டிஜிட்டல் பேமண்ட் சேவைகளை பெற அரசு தொடர்ந்து ஆதரவு அளிக்கும்” என தெரிவித்துள்ளது.