நஷ்டத்தில் இருக்கும் ஏர் இந்தியா நிறுவனத்தை தனியாருக்கு விற்க அமைக்கப்பட்டுள்ள மத்திய அமைச்சரவை குழுவுக்கு அமித்ஷா தலைவராக பொறுப்பேற்று உள்ளார்.
அரசின் பொதுத்துறை நிறுவனமான ஏர் இந்தியா சில ஆண்டுகளாக நஷ்டத்தில் இயங்கி வருகிறது. எனவே அதன் பங்குகளை தனியாருக்கு விற்றுவிட மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. 2017ல் இதற்கான மத்திய அமைச்சரவை அமைக்கப்பட்டது. அப்போது 76 சதவீத பங்குகளையும், நிர்வாகத்தையும் தனியாருக்கு கொடுப்பதாகவும், 24 சதவீத பங்குகள் அரசிடம் இருக்கும் எனவும் அறிவித்தது. ஆனால் யாரும் பங்குகளை வாங்கி கொள்ள ஆர்வம் காட்டவில்லை. இந்நிலையில் தற்போது புதிதாக அமைந்திருக்கும் மக்களவையில் மீண்டும் இதற்கான அமைச்சரவை அமைக்கப்பட்டுள்ளது. இந்த அமைச்சரவையில் நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். அமித்ஷா இதன் தலைவராக பொறுப்பேற்று உள்ளார்.
இந்தமுறை 100 சதவீத பங்குகளை விற்பதற்கு முடிவு செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பு, அன்னிய செலவாணி மற்றும் கட்டுக்கடங்காத விமான பராமரிப்பு செலவுகள் ஆகியவற்றால் இந்த முடிவினை மத்திய அரசு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.