பொதுத்துறை நிறுவனமான பெல் உள்ளிட்ட ஆறு நிறுவனங்களின் பங்குகளை தனியாருக்கு விற்க மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை தனியாருக்கு விற்பதையும், அரசு துறை பணிகளை தனியார்மயமாக்குவதையும் எதிர்த்து நேற்று தேசிய அளவில் வேலைநிறுத்த போராட்டம் நடைபெற்றது. அதேநாளில் ஆறு பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை தனியாருக்கு விற்பதற்கான முடிவை மத்திய அரசு எடுத்துள்ளது.
முன்னதாகவே நஷ்டத்தில் இயங்கி வரும் ஏர் இந்தியா நிறுவனத்தை விற்க அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் நேற்று பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் நாட்டு நலத்திட்டங்கள் மற்றும் பட்ஜெட் குறித்த ஆலோசனைகள் நடைபெற்றன.
அதில் ஏர் இந்தியா, பெல் உள்ளிட்ட ஆறு நிறுவனங்களின் பங்குகளை தனியாருக்கு விற்பதாக முடிவு செய்யப்பட்டுள்ளது. ஏர் இந்தியாவை பொறுத்த வரை மெஜாரிட்டி பங்குகள் தனியாருக்கு விற்கப்பட உள்ளது. மற்ற நிறுவனங்களை பொறுத்த வரை விற்கப்படும் பங்குகளின் சதவீதம் குறித்து தெரியவரவில்லை.