இந்தியா முழுவதும் ஜாதி வாரி கணக்கெடுப்பு எடுக்க வேண்டும் என அரசியல் கட்சிகள் குரல் கொடுத்து வரும் நிலையில், தமிழகம் உள்பட பல மாநிலங்களில் இன்னும் ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்துவதற்கான அறிகுறிகளே தெரியவில்லை.
ஆனால், ஒரு சில மாநிலங்களில் ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்ட நிலையில், சமீபத்தில் ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்தப்பட உள்ளதாக தெலுங்கானா அறிவித்தது. இந்த நிலையில், 50 நாட்களில் மாநிலம் முழுவதும் ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்தி, தற்போது அதன் முடிவுகளும் வெளியிடப்பட்டுள்ளன.
இந்த முடிவுகளின் படி, தெலுங்கானா மாநில மக்கள் தொகையில் 46.2% பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் உள்ளனர் என்று தெரியவந்துள்ளது. அடுத்தபடியாக, பட்டியல் சமூகத்தினர் 17%, பழங்குடியினர் 10.4%, முஸ்லிம் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் 10% என அறிவிக்கப்பட்டுள்ளது.
தெலுங்கானா மாநில சட்டமன்ற தேர்தல் நடைபெறும் போது, "நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்துவோம்" என காங்கிரஸ் கட்சி வாக்குறுதி அளித்தது. அந்த வாக்குறுதியின் அடிப்படையில் தற்போது தெலுங்கானாவில் ஜாதி வாரி கணக்கெடுப்பு முடிவடைந்து, அதன் முடிவுகளும் வெளியிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து கருத்து தெரிவித்த காங்கிரஸ் "இந்த கணக்கெடுப்பு ஒரு பொன் அத்தியாயம். இதில் ஏராளமான மக்கள் பங்கேற்றனர். இது காங்கிரஸ் அரசு மீது மக்களுக்கு ஏற்பட்டுள்ள நம்பிக்கையை காட்டுகிறது" என கூறியுள்ளது.