வயநாடு பகுதியில் உள்ள தங்கள் வாடிக்கையாளர்களுக்கு மூன்று நாட்கள் இலவச அழைப்புகள் மற்றும் இலவச மொபைல் டேட்டா ஏர்டெல் வழங்கிய நிலையில் தற்போது பிஎஸ்என்எல் நிறுவனமும் அதே போன்ற ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
வயநாடு பகுதியில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் மீட்பு பணிகளில் இருப்பவர்களுக்கும் ஆதரவளிக்கும் வகையில் வயநாடு மாவட்டம் நிலம்பூர் தாலுகாவில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு இன்று முதல் மூன்று நாட்களுக்கு இலவச அழைப்புகள் மற்றும் டேட்டா வழங்குவதாக சற்றுமுன் பிஎஸ்என்எல் அறிவித்துள்ளது.
அது மட்டும் இன்றி தினமும் 100 இலவச எஸ்எம்எஸ் களையும் அனுப்பிக் கொள்ளலாம், சூரல்மாலா மற்றும் முண்டக்கை கிராமங்களில் பாதிக்கப்பட்ட அனைத்து மக்களுக்கும் இலவச மொபைல் இணைப்பை பிஎஸ்என்எல் வழங்குவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சூரல்மாலாவில் உள்ள ஒரே மொபைல் டவர் பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு சொந்தமானது என்பதும் சூரல்மாலா மற்றும் மேப்பாடி மொபைல் டவர்கள் போர்க்கால அடிப்படையில் 4ஜிக்கு மாற்றப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஏர்டெல் நிறுவனத்தை அடுத்து நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பிஎஸ்என்எல் நிறுவனமும் இலவச சேவையை வழங்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.