கடந்த சில நாட்களாக பள்ளி, கல்லூரிகள், விமான நிலையங்கள், பிரபலங்களின் வீடுகள், முதல்வர் அலுவலகம், கவர்னர் மாளிகை உள்ளிட்ட இடங்களில் வெடிகுண்டு மிரட்டல்கள் வந்து கொண்டிருந்த நிலையில், அடுத்ததாக தற்போது தாஜ்மஹாலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
உத்தரப்பிரதேச சுற்றுலாத் துறைக்கு இன்று வந்த இமெயில் ஒன்றில் தாஜ்மஹாலை வெடிகுண்டு வைத்து தகர்க்கப் போவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை அடுத்து, உடனடியாக காவல்துறையினர் வெடிகுண்டு செயலிழப்பு படையினர், மோப்ப நாய்கள் ஆகியோர் தாஜ்மஹால் விரைந்ததாகவும், தாஜ்மஹாலை சுற்றியுள்ள பகுதியில் சோதனை நடத்தப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.
சுற்றுலாத் துறைக்கு வந்த ஈமெயிலில் தாஜ்மஹாலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் இந்த சோதனையை செய்ததாகவும், சோதனையின் முடிவில் எந்த வெடிகுண்டும் கண்டுபிடிக்கப்படவில்லை என்றும், இதுவும் ஒரு போலியான மிரட்டல் என்றும் தெரியவந்ததாக உதவி காவல் ஆணையர் தெரிவித்துள்ளார்.
இதனை அடுத்து, வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் யார் என்பதை கண்டுபிடிக்க சைபர் கிரைம் உதவியுடன் போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருவதாக கூறப்படுகிறது.