மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, துர்கா பூஜை குழுக்களுக்கு மாநில அரசு வழங்கும் நிதி உதவியை ரூ.85,000-ல் இருந்து ரூ.1.10 லட்சமாக உயர்த்தி அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு, பண்டிகை காலத்திற்கு முன்னதாக, கொல்கத்தாவில் நடைபெற்ற பூஜை ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டத்தில் வெளியிடப்பட்டது.
மாநிலம் முழுவதும் சுமார் 45,000 துர்கா பூஜை குழுக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த குழுக்கள் அனைத்தும் இந்த அதிகரித்த மானியத்தால் பயனடையும். இதன் மூலம், மொத்த செலவு கடந்த ஆண்டு ரூ.340 கோடியாக இருந்த நிலையில், இந்த ஆண்டு ரூ.400 கோடிக்கும் அதிகமாக உயரும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, துர்கா பூஜை குழுக்களுக்கான நிதி மானியத்தை உயர்த்தி அறிவித்ததற்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. பாஜகவின் மூத்த தலைவர் ராகுல் சின்ஹா இந்த விவகாரம் குறித்து பேசும்போது, இந்த மானியம் அரசு கருவூலத்திலிருந்து வருவதால், அது வரி செலுத்துவோர் மீது தேவையற்ற சுமையை ஏற்படுத்துகிறது என்று குற்றம் சாட்டினார்.
"இந்த மானியத்தை மம்தா பானர்ஜி ஏன் தனது திரிணாமுல் கட்சி நிதியிலிருந்து அல்லது தனது சொந்த பணத்திலிருந்து வழங்கக் கூடாது? தேர்தல் நெருங்குவதால், இந்து வாக்குகளை பெறுவதற்காக அவர் அரசு பணத்தை அள்ளி வீசுகிறார்" என்று நேரடியாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
இந்த அறிவிப்பு மேற்கு வங்க அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.