பஞ்சாபில் நடந்துமுடிந்த சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றதன் மூலம் 10 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றியுள்ளது.
பஞ்சாபில் மொத்தம் 117 தொகுதிகளுக்கான சட்டசபை தேர்தல் கடந்த மாதம் நடைபெற்றது. இதில் ஆளும் சிரோண்மனி அகாலி தள் - பாஜக கூட்டணி ,காங்கிரஸ் கட்சிகளுடன் ஆம் ஆத்மியும் களத்தில் குதித்தது. இதனால் பஞ்சாப் தேர்தல் மிகவும் பரபரபாக காணப்பட்டது. தேர்தலுக்கு பின் கருத்துகணிப்பின்படி அங்கு இழுப்பறி நிலையே நீடிக்கும் என்று கூறப்பட்டன. ஆனால் கள நிலவரமோ அதற்கு எதிர்மறையாக இருந்தது. இன்று காலை வாக்குகள் எண்ணிக்கை அறிவிப்புகள் வெளிவரத் தொடங்கியது முதலே காங்கிரஸ் முன்னிலையில் இருந்தது.
மொத்தம் உள்ள 117 தொகுதிகளில் 75 தொகுதிகளில் காங்கிரஸ் முன்னிலையில் உள்ளது. இதற்கு அடுத்து ஆம் ஆத்மி 23 இடங்களிலும், ஆளும் கட்சியான சிரோண்மனி அகாலி தள் - பாஜக கூட்டணி 19 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன.
பஞ்சாப் சட்டபேரவையில் குறைந்தபட்சம் 59 தொகுதிகளில் வெற்றி பெற்றாலே பெரும்பான்மையை கைப்பற்ற முடியும். அதன்படி 75 இடங்களில் முன்னிலையில் உள்ள காங்கிரஸ் அங்கு ஆட்சி அமைப்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. இந்த வெற்றியின் மூலம் பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி 10 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் ஆட்சியை கைப்பற்றியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.