டெல்லியில் சிஏஏ எதிர்ப்பு போராட்டத்தின்போது துப்பாக்கி சூடு நடத்திய கபில்குஜ்ஜார் என்பவர் இன்று பாஜகவில் இணைந்த நிலையில், பல்வேறு விமர்சனங்கள் அக்கட்சியின் மீது வைக்கப்பட்டது, இதையடுத்து, கட்சியில் சேர்த்த சில மணிநேரங்களிலேயே கபில் குஜ்ஜாரை நீக்கி பாஜக உத்தரவிட்டுள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன் மத்திய அரசு சிஏஏ என்ற மசோதாவை அமல்படுத்தியது. இந்த மசோதாவுக்கு நாடு முழுவதும் உள்ள எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.
தமிழகத்திலும் திமுக உள்பட பல அரசியல் கட்சிகள் இந்த மசோதாவிற்கு எதிர்ப்பு குரல் கொடுத்தனர் என்பது குறிப்பிடதக்கது. அதுமட்டுமின்றி அனைத்து மாநிலங்களிலும் இந்த சட்டத்திற்கு எதிராக போராட்டங்கள் நடந்தன.
அந்த வகையில் டெல்லியில் ஷாகின் பாக் என்ற பகுதியில் சிஏஏ மசோதாவுக்கு எதிராக மாபெரும் போராட்டம் நடந்தது. இந்த போராட்டத்தின்போது துப்பாக்கி சூடு நடத்தியதாக கைது செய்யப்பட்டவர் கபில் குஜ்ஜார். இவர் இன்று திடீரென பாஜகவில் இணைந்து உள்ளதாக தகவல்கள் வெளியானது.
சிஏஏ எதிர்ப்பு போராட்டத்தில் துப்பாக்கி சூடு நடத்திய நடத்திய குற்றவாளி என்று கருதப்படும் கபில் குஜ்ஜார் இன்று பாஜகவில் இணைந்து உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து பலரும் பாஜக கட்சிக்கு தங்களின் விமர்சனங்களைத் தெரிவித்தனர்.
இந்நிலையில் கட்சியில் சேர்த்த சில மணிநேரங்களிலேயே கபில் குஜ்ஜாரை நீக்கி பாஜக உத்தரவிட்டுள்ளது.