இமாச்சல பிரதேச சட்டமன்ற தேர்தலில் அதிக இடங்களை பெற்று பாஜக முன்னிலையில் இருப்பதால், அங்கு பாஜகதான் ஆட்சி அமைக்கும் என்பது உறுதியாகியுள்ளது.
குஜராத்தில் 2 கட்டங்களாகவும், இமாச்சல பிரதேசத்திலும் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் முடிவுகள் இன்று வெளியானது. அதில், குஜராத் மற்றும் இமாச்சலபிரதேசம் ஆகிய இரண்டிலும் தொடக்கம் முதல் பாஜகவே முன்னிலை வகித்து வந்தது. ஒருகட்டத்தில், குஜராத்தில் பாஜகவிற்கு இணையாக காங்கிரஸ் முன்னிலை வகித்தது. ஒரு கட்டத்தில் பாஜகவை தாண்டியும் காங்கிரஸ் முன்னிலை வகித்தது. ஆனால், செல்ல செல்ல பாஜக மீண்டும் முன்னிலையில் வந்தது.
தற்போதைய நிலவரப்படி குஜராத்தில் உள்ள 182 தொகுதிகளில் பாஜக 102 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. காங்கிரஸ் 76 இடங்களில் முன்னிலையில் உள்ளது. மற்ற கட்சிகள் 4 இடத்தில் மட்டுமே முன்னிலையில் உள்ளது.
அதேபோல், இமாச்சலப்பிரதேசத்தில் மொத்தம் உள்ள 68 தொகுதிகளில் 42 இடங்களில் பாஜகவும், 22 இடங்களில் காங்கிரஸும், மற்ற கட்சிகள் 4 இடங்களிலும் முன்னிலையில் உள்ளது.
எனவே, அதிக தொகுதிகளில் முன்னிலையில் இருப்பதால் குஜராத் மற்றும் இமாச்சல பிரதேசம் இரண்டிலும் பாஜகவே மீண்டும் ஆட்சி அமைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த சட்டமன்ற தேர்தலில் இமாச்சலப் பிரதேசத்தில் பாஜகவை தோற்கடித்து காங்கிரஸ் ஆட்சியை பிடித்தது. தற்போது பாஜகவிடம் காங்கிரஸ் தோல்வியைடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.