இந்தியாவில் விமான பயிற்சிகளுக்கான புதிய பள்ளியை ஏர் இந்தியா நிறுவனம் தொடங்க உள்ள நிலையில் ஆண்டுக்கு 180 பேருக்கு விமான பயிற்சி அளிக்க உள்ளதாக தெரிவித்துள்ளது.
இந்தியாவிலிருந்து ஏர் இந்தியா உள்பட பல நிறுவனங்களை சேர்ந்த உள்நாட்டு, பன்னாட்டு விமான சேவைகள் நடந்து வருகின்றன. ஆனால் விமான சேவைகள் அதிகரித்துவிட்ட அளவிற்கு விமான பயிற்சி பள்ளிகள் குறைவாகவே உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் விமான பயிற்சி பெற விரும்பும் பல மாணவர்கள் வெளிநாடுகளுக்கு சென்று விமான பயிற்சி பெறும் சூழல் உள்ளதாக தெரிவித்துள்ள ஏர் இந்தியா நிறுவனம், அந்த காரணத்தால் இந்தியாவில் விமானிகளுக்கு பயிற்சி அளிக்கும் பிரத்யேகமான பயிற்சி பள்ளியை நிறுவ உள்ளதாக தெரிவித்துள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள அமராவதியில் இதற்கான பயிற்சி மையத்தை அமைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஒரு ஆண்டுக்கு 180 பேருக்கு விமான பயிற்சி அளிக்க உள்ளதாகவும், இந்த பயிற்சிகளில் சேர முன் அனுபவம் தேவையில்லை என்றும், தகுதி, ஆர்வமுள்ளவர்கள் இப்பள்ளியில் முழுநேர பயிற்சியில் சேர்ந்து விமானி ஆகலாம் என்று கூறப்பட்டுள்ளது.