கொரோனா வைரஸ் பாதிப்பு கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் இருந்து உலகம் முழுவதும் பரவி வருகிறது என்பதும் இந்தியாவில் பிப்ரவரி மாதத்திலிருந்து பரவி உள்ளது என்பதும் தெரிந்ததே
இந்தியா உள்பட உலக நாடுகள் முழுவதிலும் பரவி உள்ள கொரோனா வைரஸால் சுமார் 7 கோடிக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் கொரோனா வைரஸ்க்கு அதிகாரபூர்வமாக தடுப்பூசி மருந்து கண்டுபிடிக்கவில்லை என்பதால் இந்த வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது
இந்த நிலையில் தற்போது இங்கிலாந்து நாட்டில் புதிய வகையான கொரோனா வைரஸ் ஒன்று மிக வேகமாக பரவி வருவதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இதனை அடுத்து அந்நாட்டில் இருந்து வரும் விமானங்களை அண்டை நாடுகள் தடை செய்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் இங்கிலாந்திலிருந்து வரும் அனைத்து விமானங்களையும் உடனடியாக தடை செய்யுமாறு மத்திய அரசிடம் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளார். கொரோனா வைரஸின் புதிய பரிணாமம் இங்கிலாந்தில் வெளிப்பட்டு இருப்பதாகவும் இது மிக வேகமாக பரவும் தன்மை கொண்டது என்றும், எனவே இங்கிலாந்திலிருந்து வரும் அனைத்து விமானங்களையும் உடனே தடை செய்யுமாறு மத்திய அரசை கேட்டுக் கொள்கின்றேன் என்று அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்