டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு வழங்கப்பட்ட இடைக்கால ஜாமீன் நாளையுடன் முடிவடைவதை அடுத்து நாளை மறுநாள் திகார் சிறையில் சரணடைய உள்ளேன் என அவர் கூறியுள்ளார். மேலும் மருத்துவர்கள் சில பரிசோதனைகளை பரிந்துரைத்தும் பாஜக அரசு ஜாமீனை நீட்டிக்க மறுக்கிறது என்றும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
ஆனாலும் நாட்டை சர்வாதிகாரத்தில் இருந்து பாதுகாக்க சிறை செல்வதில் பெருமையே என்று கூறிய கெஜ்ரிவால், சிறையில் இருந்தாலும் வெளியே இருந்தாலும் மக்களுக்கான பணிகள் ஒருபோதும் தடைபடாது என்றும், வெளியே வந்த பிறகு பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கும் திட்டத்தை தொடங்குவேன் என்றும் அவர் கூறியுள்ளார்.
முன்னதாக டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்ட டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜூன் 1-ம் தேதி வரை இடைக்கால ஜாமீன் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் ஜூன் 2-ம் தேதி ஆஜராகும்படி அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு நீதிபதிகள் ஆணையிட்ட நிலையில் அவரது ஜாமீன் நீட்டிப்பு மனு தள்ளுபடி செய்யப்பட்டது.