தெலங்கானா மாநிலம் மஞ்சேரியல் பகுதியைச் சேர்ந்த சத்தேனா என்பவர் சாதிக் கலப்புத் திருமணம் செய்துகொண்ட தனது மகள் அனுராதாவை கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெலங்கானா மாநிலம் மஞ்சேரியல் பகுதியைச் சேர்ந்தவர் சத்தேனா. இவருக்கு அனுராதா என்ற மகள் இருந்தார். அவர், அதே கிராமத்தில் வசிக்கும் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த லட்சுமணனைக் காதலித்துள்ளார். இதற்கு அனுராதாவின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவிக்கவே அனுராதாவும் லட்சுமணும் வீட்டை விட்டு வெளியேறி ஹைதராபாத் சென்று டிசம்பர் 3 ஆம் தேதி திருமணம் செய்து கொண்டுள்ளனர்.
திருமணம் முடிந்து மூன்று வாரங்கள் கழித்து சொந்த ஊருக்கு திரும்பியுள்ளனர் புதுமணத் தம்பதியினர். லட்சுமணன் வீட்டில் இருவரும் தங்கியிருப்பது தெரிந்து அனுராதாவின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கூட்டமாக வந்து லட்சுமணன் மற்றும் அவரது உறவினர்களைத் தாக்கி விட்டு அனுராதாவைக் கடத்திச் சென்றுள்ளனர்.
அனுராதாவை பக்கத்து ஊருக்கு கடத்திச் சென்று கொலை செய்த சத்தேனா கும்பல் அவரது உடலை எரித்து சாம்பலை ஆற்றில் கரைத்ததாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து லட்சுமணன் தனது மனைவியைக் கொலை செய்துவிட்டதாக சத்தேனா மற்றும் உறவினர்கள் மீது புகார் அளிக்க சத்தேனாவும் உறவினர்கள் சிலரும் கைது செய்யப்பட்டுள்ணர்.
தெலங்கானாவில் சில மாதங்களுக்கு முன்னர் இதேப் போல காதல் திருமணம் செய்த அம்ருதா – பிரணய் தமபதியினரில் பிரனய் பொது இடத்தில் வைத்து கொல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. தெலங்கானா மாநிலத்தில் சமீப காலமாக ஆணவக்கொலைகள் அதிகரித்து வருவது கவலையளிப்பதாக உள்ளது.