கல்வி முதல் மருத்துவம் வரை கிட்டத்தட்ட அனைத்து துறைகளிலும் ஏஐ டெக்னாலஜி நுழைந்துவிட்ட நிலையில், தற்போது கொசுக்களை ஒழிக்க ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு திட்டத்தை பயன்படுத்த ஆந்திர அரசு திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கொசு அதிகம் உள்ள பகுதிகளை கண்காணிக்கவும், அதன் இனங்களை கண்டறியவும், சரியான பூச்சிக்கொல்லி தெளிக்கவும் ஸ்மார்ட் திட்டம் ஒன்றை ஆந்திரா அரசு ஆரம்பித்துள்ளது. இந்த திட்டத்தின்படி, கொசுக்கள் அதிகமாக உள்ள பகுதிகளை ஏஐ மூலம் கண்டறிந்து, ட்ரோன்களை பயன்படுத்தி மருந்துகள் தெளித்து கொசு ஒழிப்பு பணிகளை மேற்கொள்ள முடியும்.
சென்சார் வாயிலாக அதிக கொசு இருக்கும் பகுதிகளை ஏஐ கண்டறியும். அதன்பின்பு, ட்ரோன் மூலம் அதிகமாக கொசுக்கள் உள்ள பகுதிகளில் மருந்து தெளித்து கொசுக்கள் ஒழிக்கப்படும். இதன் மூலம் கொசுவால் ஏற்படும் டெங்கு, சிக்கன் குனியா, மலேரியா போன்ற நோய்களை தடுக்கலாம் என்று ஆந்திரா அரசு கூறியுள்ளது.
இந்தியாவில் முதன்முறையாக கொசு ஒழிப்பு பணிக்காக ஏஐ டெக்னாலஜியை பயன்படுத்தும் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் இந்த திட்டத்திற்குப் பொதுமக்கள் மத்தியில் ஆதரவு குவிந்து வருகிறது.