இந்தியா முழுவதும் சுங்க சாவடிகளில் ஃபாஸ்டேக் டிஜிட்டல் பணம் செலுத்தும் முறை நடைமுறையில் உள்ள நிலையில் இனி முழுவதும் ஃபாஸ்டேக் முறை அமல்படுத்த உள்ளதாக மத்திய அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் உள்ள தேசிய நெடுஞ்சாலை சுங்க சாவடிகளில் பணம் செலுத்துவதற்கு ஃபாஸ்டேக் டிஜிட்டல் பணம் செலுத்தும் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. கடந்த ஜனவரி மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட ஃபாஸ்டேக் முறையில் கோளாறுகள் இருப்பதாகவும், அதிக பணம் எடுத்தல், பயணிக்காமலே பணம் வசூலித்தல் போன்ற பிரச்சினைகளை சந்திப்பதாகவும் பயணிகள் புகார் அளித்தனர். இந்நிலையில் அனைத்து சுங்க சாவடிகளிலும் ஒரு வழி மட்டும் ரொக்க பணம் மூலமாக சுங்க கட்டணம் செலுத்துவதற்கும், மீதி வழிகள் ஃபாஸ்டேக் முறைக்கும் மாற்றப்பட்டன.
இந்நிலையில் தற்போது மத்திய தரைவழி போக்குவரத்து அமைச்சகம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி இந்தியா முழுவதும் ஜனவரி 2021 முதலாக நான்கு சக்கர வாகனங்கள் அனைத்தும் ஃபாஸ்டேக் முறையில் மட்டுமே பணம் செலுத்த வேண்டும் என்றும், அதற்கேற்றார்போல சுங்க சாவடிகள் மாற்றியமைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.