Publish Date: Wed, 27 Jun 2018 (11:51 IST)
Updated Date: Wed, 27 Jun 2018 (12:12 IST)
குஜராத் பல்கலைக்கழக தேர்தலில் பாராபட்சமாக செயல்பட்டதாகக் கூறி மாணவர்கள் பேராசிரியரைத் தாக்கி அவரின் முகத்தில் மை பூசி இழுத்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வரும் ஜூலை 22-ம் தேதி குஜராத் மாநிலம் கட்ச் மாவட்டத்தில் உள்ள கே.எஸ்.கே.வி.கே.யு. பல்கலைக்கழகத்தில் செனட் தேர்தல் நடைபெற உள்ளது.
இத்தேர்தலுக்காக வாக்காளர் பட்டியலை பேராசிரியர் கிரின் பாக்சி என்பவர் தயாரித்து வந்தார். அதில் தங்கள் தரப்பை சேர்ந்த மாணவர்களின் வாக்காளர் பதிவு விண்ணப்பங்களை பேராசிரியர் கிரின் திட்டமிட்டு வேண்டுமென்றே நிராகரிக்கிறார் என ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் மாணவர் பிரிவான ஏ.பி.வி.பி. அமைப்பினர் குற்றம்சாட்டி வந்தனர்.
இந்நிலையில் நேற்று வகுப்பறையில் பாடம் எடுத்துக் கொண்டிருந்த, பேராசிரியர் கிரின் பாக்சியை சூழ்ந்த ஏபிவிபி மாணவர்கள் அவரை தாக்கி வெளியே இழுத்துச் சென்றனர். மேலும் அவர் முகத்தில் மை பூசி அவமானப்படுத்தினர். இதனால் பல்கலைக்கழக வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
முகத்தில் மை பூசியதால் எரிச்சல் தாங்க முடியாத பேராசிரியர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து பேசிய கல்லூரியின் துணைவேந்தர், ஏ.பி.வி.பி. மாணவர்கள் தாக்கல் செய்த வாக்காளர் பதிவு விண்ணப்பங்களை வேண்டுமேன்றே நிராகரிக்கப்பட்டதாக கூறுவதில் உண்மை இல்லை எனவும் ஆசிரியரை தாக்கிய மாணவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.