சமீபமாக தெரு நாய்க்கடி சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில் இளைஞர் ஒருவர் நாய்க்கடிக்கு சரியான சிகிச்சை எடுக்காததால் ரேபிஸ் தாக்கி பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசுரை சேர்ந்த 23 வயதான எட்வின் பிரியன் என்ற இளைஞர் தளியில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்துள்ளார். இவரை கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் நாய் ஒன்று கடித்துள்ளது. சிறிய கடிதான் என அவர் அதற்கு சிகிச்சை எடுத்துக் கொள்ளாமல் அலட்சியம் செய்துவிட்டதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று முன் தினம் அடிக்கடி எச்சில் துப்பிக் கொண்டே இருந்தவர், திடீரென சத்தம் போட்டு அலறியவாறு இருந்துள்ளார். அவரை உடனடியாக அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதித்துள்ளனர். அவருக்கு பாதிப்பு அதிகமாக இருந்ததால் தளி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். பின்னர் அங்கிருந்து ஓசூர் மருத்துவமனை கொண்டு சென்ற நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக பலியானார். அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள், அவரது குடும்பத்தினருக்கும் அவரிடமிருந்து தொற்று ஏதேனும் பரவியுள்ளதா என்பது குறித்து மருத்துவ பரிசோதனை செய்ததுடன், தடுப்பூசியும் போட்டுள்ளனர்.
நாய்க்கடி சம்பவங்களால் ஏற்படும் தொற்றானது உடனே உடலில் தெரியாது என்றும், சில மாதங்கள் இது அபாயகரமான அளவில் பாதிப்புகளை ஏற்படுத்தி உயிர்பலியை ஏற்படுத்தும் எனவும் மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். எனவே சிறிய அளவில் உள்ள நாய்க்கடியாக இருந்தாலும் உடனடியாக மருத்துவமனை சென்று தடுப்பூசி போட்டுக் கொள்வது நல்லது என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.
Edit by Prasanth.K