கேரளாவில் குப்பைகளை அகற்றக்கோரி நீதிபதி ஒருவர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் காய்கறி மார்க்கெட் உள்ளது. இந்த மார்க்கெட்டிலிருந்து வெளியேற்றப்பட்ட குப்பைகள் ஒரு வாரமாகியும் அகற்றப்படாமல் சாலையோரம் குவித்து வைக்கப்பட்டிருந்தது.
கேரளாவில் மர்மக்காய்ச்சல் ஏற்படுவதால், நோய்த் தொற்று ஏற்படும் என பயந்துபோய் அப்பகுதிவாசிகள், வியாபாரிகள், அந்த பகுதியில் இருந்த பள்ளி நிர்வாகத்தினர் என அனைவரும் மாநகராட்சி நிர்வாகத்திடம் வேண்டுகோள் விடுத்தும் குப்பைகள் அகற்றப்படவில்லை.
இதுகுறித்து அவர்கள் எர்ணாகுளம் சட்ட உதவி மைய துணை நீதிபதி பசீரிடம் புகார் அளித்தனர். உடனடியாக மார்க்கெட் பகுதிக்கு சென்ற அவர், போராட்டத்தில் ஈடுபட்டார். தகவலறிந்த அதிகாரிகள் மின்னல் வேகத்தில் மார்க்கெட்டுக்கு வந்து குப்பைகளை அகற்றினர். இதனால் அப்பகுதி மக்கள் நிம்மதியடைந்தனர்.
ஒரு வாரமாக மழை பெய்து வருவதனால் தான் குப்பைகளை அகற்றம் செய்ய முடியவில்லை என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.