இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ள மசோதாக்களில் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளை தடை செய்யக்கூடிய மசோதா கவனம் பெற்றுள்ளது.
இந்தியாவில் ஆன்லைன் சூதாட்ட செயலிகள் மக்களால் அதிகமாக பயன்படுத்தப்படும் நிலையில், ஏராளமான மக்கள் இதில் பணத்தை இழப்பதும், தற்கொலை போன்ற முடிவுகளை எடுப்பதும் தொடர் கதையாகி வருகிறது. இதுகுறித்த சரியான சட்டத்திட்டங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் இருந்து வந்த நிலையில் இன்று நாடாளுமன்றத்தில் இது தொடர்பான மசோதா தாக்கல் செய்யப்பட உள்ளது.
இது ஆன்லைன் கேமிங் செயலிகள் மற்றும் வலைதளங்களில் நடைபெறும் விளையாட்டுகளின் உண்மைத் தன்மையை சோதிப்பது, தடை விதிப்பது உள்ளிட்ட செயல்பாடுகளை மேற்கொள்வதற்கான வழிமுறைகளை ஏற்படுத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அதன்படி, வங்கிகள், நிதி நிறுவன கணக்குகளில் இருந்து ஆன்லைன் சூதாட்டங்களுக்கு பரிவர்த்தை செய்ய அனுமதி மறுக்கப்படுவது, அங்கீகரிக்கப்படாத ஆன்லைன் சூதாட்டங்களை ஊக்குவிக்கும் விளம்பரங்களுக்கு தடை விதிப்பது, அவற்றை விளம்பரப்படுத்தும் இன்ப்ளூயன்ஸர்கள், நடிகர்கள் மீது நடவடிக்கை எடுப்பது உள்ளிட்ட பல நடவடிக்கைகள் இதில் இடம்பெறும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்த மசோதா சட்டமானால், அங்கீகரிக்கப்படாத ஆன்லைன் சூதாட்டங்களில் ஈடுபடுபவர்களுக்கு 3 ஆண்டுகள் சிறை மற்றும் ரூ.1 கோடி வரை அபராதம் விதிக்க இது வழிவகை செய்யும், மேலும் அங்கீகரிக்கப்படாத ஆன்லைன் சூதாட்டங்களை ப்ரொமோட் செய்பவர்களுக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.50 லட்சம் அபராதம் விதிக்கப்படும் வாய்ப்பையும் இந்த சட்டம் வழங்குகிறது.
Edit by Prasanth.K