ஜம்மு காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டில் இரண்டு வெவ்வேறு ஊடுருவல் எதிர்ப்பு நடவடிக்கைகளில் 3 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.
ஜம்மு காஷ்மீர் எல்லை வழியாக பயங்கரவாதிகள் ஊடுருவி பல்வேறு நாச வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர். அவ்வாறு வரும் பயங்கரவாதிகளுக்கு இந்திய ராணுவ வீரர்கள் தக்க பதிலடி கொடுத்து வருகின்றனர். அதன்படி எல்லை வழியாக ஊடுருவ முயன்ற மூன்று பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இது தொடர்பாக ராணுவம் தரப்பில் அளிக்கப்பட்டுள்ள விளக்கத்தில், "குப்வாரா மாவட்டத்தில் தங்தார் மற்றும் மச்சில் பகுதிகளில் நேற்றிரவு பயங்கரவாதிகள் ஊடுருவல் முயற்சியில் ஈடுபட்டனர். அந்த பகுதியில் பாதுகாப்பு மற்றும் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த படை வீரர்கள் துரிதமாக செயல்பட்டு, இந்த பயங்கரவாதிகள் ஊடுருவல் முயற்சியை முறியடித்தனர்.
இதனைத் தொடர்ந்து, அந்த பகுதியை தங்களுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். மேலும், பயங்கரவாதிகள் யாரும் ஊடுருவ முயல்கின்றனரா? என்று கண்டறியும் பணியும் நடந்து வருகிறது. இந்த என்கவுன்டரில் 3 பயங்கரவாதிகள் உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. அதே நேரத்தில் உடல்கள் இன்னும் மீட்கப்படவில்லை. பணிகள் நடைபெற்று வருகிறது என இந்திய ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.