நாடு முழுவதும் 1,138 ரயில்கள் இயக்கம்
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் நாடு முழுவதும் ரயில் சேவை நிறுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் கடந்த செப்டம்பர் மாதம் முதல் படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் ரயில் சேவையும் கொஞ்சம் கொஞ்சமாக தொடங்கியது
முதலில் புலம்பெயர் தொழிலாளர்களின் வசதிக்காக சிறப்பு ரயில்கள் விடப்பட்ட நிலையில் அதன் பின்னர் பயணிகளுக்காக ரயில்கள் ஓரளவு இயக்கப்பட்டன. இந்த நிலையில் தற்போது வந்துள்ள தகவல்படி கொரோனா வைரஸ் பரவுதலுக்கும் இடையே நாடு முழுவதும் ஆயிரத்து 138 விரைவு ரயில்கள் இயக்கப்பட்டு வருவதாக மத்திய ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதில் பண்டிகை கால சிறப்பு ரயில்களும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது
நாடு முழுவதும் உள்ள புறநகர் ரயில் சேவைகளில் மொத்தம் 4 ஆயிரத்து 807 ரயில்கள் இயக்கப்பட்டு வருவதாகவும் ரயில்வே துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ளது. மேலும் இன்னும் ஒரு சில நாட்களில் ரயில்வே துறை முழுவதுமாக இயங்கும் என்றும் பொதுமக்களும் பயணிகளும் தகுந்த ஒத்துழைப்பு தரவேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது