ஆதித்யவர்மா: திரைவிமர்சனம்

வெள்ளி, 22 நவம்பர் 2019 (12:55 IST)
அர்ஜூன்ரெட்டி பார்த்தவர்களுக்கு இந்த படம் சிறிது ஏமாற்றம் கொடுத்தாலும், பார்க்காதவர்களுக்கு ஒரு திருப்தியான காதல் படம் பார்த்த அனுபவம் ஏற்படும் என்பதுதான் இன்று வெளியாகியிருக்கும் ‘ஆதித்ய வர்மா’ திரைப்படத்தின் ஒரு வரி விமர்சனம் ஆகும்
 
மருத்துவக் கல்லூரி மாணவரான ஆதி, மிகச் சிறந்த மாணவராக இருந்தாலும் அவரது கோபம் காரணமாக தனது பேராசிரியர்களிடம் வாழ்த்துக்கள் மட்டுமின்றி கண்டனத்தையும் பெறுகிறார். ஒரு கட்டத்தில் சக மாணவர் தாக்கிவிட்டதாக ஒரு மாதம் சஸ்பெண்ட் ஆக, அந்த நேரத்தில் கல்லூரியை விட்டே வெளியேற முடிவு செய்கிறார். ஆனால் திடீரென பனிதா சந்துவை பார்த்ததும் மனம் மாறி மீண்டும் கல்லூரியில் தொடர்கிறார். பனிதாவுடனான காதல் அவருடைய கோபத்தை முற்றிலும் கட்டுப்படுத்த ஒரு புது மனிதனாக மாறுகிறார். இந்த காதல் வெற்றிகரமாக சென்று கொண்டிருக்கும் நிலையில் திடீரென வில்லன் போல் பனிதாவின் தந்தை இந்த காதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார். பனிதாவின் தந்தையிடம் ஆதி மீண்டும் கோபப்பட்டதால் தனது காதலையும் காதலியையும் இழக்கின்றார். பனிதாவுக்கு வேறொருவருடன் திருமணம் ஆகி விட்டதை அறிந்து, அந்த சோகத்தில் குடி மற்றும் போதைக்கு முழுமையாக அடிமையாகிறார். கிட்டத்தட்ட காதலியை மறந்துவிட்ட நிலையில் திடீர் திருப்பம் ஏற்பட்டு பனிதாவை மீண்டும் சந்திக்கின்றார். அதன்பின்  முடிவு என்பதுதான் இந்த படத்தின் கிளைமாக்ஸ்.
 
விக்ரம் மகன் துருவ் விக்ரமுக்கு இந்த படம் முதல் படமாக இருந்தாலும், முதல் படம் தான் என்பதை நம்பவே முடியாத அளவுக்கு அவரது நடிப்பு உள்ளது. ஏற்கனவே ஒரு பத்து பதினைந்து படங்கள் நடித்த அனுபவம் உள்ள நடிகர் போல் ஒவ்வொரு காட்சியிலும் நடித்துள்ளார். ஒரு சில காட்சிகளில் அவரது தந்தையை தூக்கி சாப்பிடும் அளவுக்கு அவரது நடிப்பு உள்ளது. குறிப்பாக தாயாரை இழந்து தவிக்கும் தனது தந்தைக்கு ஆறுதல் சொல்லும் காட்சியில் அவரது மிகச் சிறந்த நடிப்பு பாராட்டத்தக்கது. அதேபோல் கிளைமாக்ஸில் தனது காதலியுடன் மெச்சூரிட்டியாக பேசுவது என முதல் படத்திலேயே துருவ் விக்ரம் அசத்துகிறார் 
 
பனிதா சந்துவுக்கு நடிப்பதற்கு பெரிய வேலை. இருப்பினும் துருவ்வை சமாதானம் படுத்தும் காட்சி, கிளைமாக்ஸ் காட்சிகளில் கவனம் பெறுகிறார். மேலும் நான்கு காட்சிகளுக்கு ஒரு காட்சியில் லிப்கிஸ் கொடுத்து இளசுகளை கிளுகிளுப்பூட்டுகிறார். 
 
லீலா சாம்சன், ராஜா, பகவதி பெருமாள், ப்ரியா ஆனந்த், அன்புதாசன் உள்பட படத்தில் நடித்திருக்கும் ஒவ்வொரு கேரக்டரும் தங்களுடைய கேரக்டரை முழுமையாக புரிந்துகொண்டு நடிப்பை வெளிப்படுத்தி உள்ளதால் அனைத்து கேரக்டர்களும் மனதில் நிற்கும் வகையில் உள்ளது
 
ராடஹ்ன் இசையில் அனைத்து பாடல்களும் கேட்கும்படி உள்ளது. மேலும் பின்னணி இசை படத்தின் கதைக்கு பொருத்தமான வகையில் உள்ளது. ரவி கே சந்திரன் ஒளிப்பதிவு மற்றும் விவேக் ஹர்சனின் படத்தொகுப்பு மிகச்சிறப்பு.
 
இயக்குனர் கிரிசய்யா ஒரிஜினல் படமான அர்ஜுன்ரெட்டி படத்தில் பணிபுரிந்தவர் என்பதால் இந்தப் படத்தை மிகவும் ஒரு சரியான ரீமேக்காக எடுத்துள்ளார். எந்த காட்சியையும் அவர் மிகைப்படுத்தால் உருவாக்கி இருப்பது திருப்தியாக உள்ளது. இருப்பினும் முதல் பாதியில் உள்ள விறுவிறுப்பு இரண்டாம் பாதியில் சற்று குறைவு. இதற்கு காரணம் அதிகமான போதை காட்சிகளும் ஒரு காரணம். மொத்தத்தில் காதலர்கள் கொண்டாடும் ஒரு காதல் காவியத்தை உருவாக்கியிருக்கிறார் இயக்குனர் கிரிசய்யா என்பதில் சந்தேகம் இல்லை
 
ரேட்டிங்: 3/5
 

வெப்துனியாவைப் படிக்கவும்

அடுத்த கட்டுரையில் "நெஞ்சிருக்கும் வரை" பட நடிகையா இது...! பார்த்தா நெஞ்ச இழுத்து பிடிச்சுப்பீங்க..!