Article Movie Review In Tamil 1977 109031300054_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

1977

Advertiesment
1977 விமர்சனம் சரத்குமார் நமிதா
கூட இருப்பவர்களையே கொன்று குவிக்கும் வில்லன், குண்டு மழைக்கு நடுவில் ஸ்லோமோஷனில் ஓடும் ஹீரோ... கதையாவது புதுசாக இருக்கும் என்று பார்த்தால் அதிலும் பல வருட பழக்கம்.

கடற்கரை கிராமத்தில் கடவுளாக கொண்டாடப்படுகிறவர் ராசையா (அப்பா சரத்). அவரது மகன் புகழ் பெற்ற விஞ்ஞானி (மகன் சரத்). ஊரைவிட்டு வெளியே ஓரடி எடுத்து வைக்காத ராசையா, பத்தி‌ரிகையில் வரும் ஒரு புகைப்படத்தைப் பார்த்து பெட்டியும் படுக்கையுமாக ஊரைவிட்டு வெளியேற முயல்கிறா‌ர். ஆனால், வாசல் தாண்டியதுமே நெஞ்சு வலியால் அவரது உயிர் பி‌ரிந்து விடுகிறது.
webdunia photoWD

ராசையா அப்படி எந்த புகைப்படத்தைப் பார்த்தார்? அவரது உயிரைப் பறிக்கும் அளவுக்கு அந்தப் புகைப்படத்தில் என்ன இருந்தது? மலேசியா சென்று விஞ்ஞானி மகன் பதில்களை கண்டுபிடிப்பதுடன் தந்தைக்கு 30 வருடங்களுக்கு முன் ஏற்பட்ட களங்கத்தையும் துடைத்தெறிகிறார்.

நரைத்த தாடி தலைமுடியுடன் அப்பா சரத் அறிமுகமாகும்போது அட, ஏதோ புதுசா சொல்ல வர்றாங்க என்று நிமிர்ந்து உட்கார்கிறோம். அடுத்தக் காட்சியிலேயே கோட்டும், குளிர் கண்ணாடியுமாக கிராமத்தில் வந்திறங்கும் மகன் சரத்துக்கு நெஞ்சில் வீரம் இருக்கணும், ஈரம் இருக்கணும் என்று அறிமுகப்பாடல் வைத்து அப்செட்டாக்குகிறார்கள்.

பிளாஷ்பேக்கில் வரும் அப்பா சரத்தின் மலேசியா போலீஸ் எபிசோடிலும் மிடுக்கு குறைவு. வெளியே கி‌ரிமினல்களை சுடுகிறவர் வீட்டில் தோசை சுடுகிறார். ஹீரோவின் ஈரத்தையும், வீரத்தையும் சொல்ல வேறு காட்சிகளே இல்லையா?

உடல் உறுப்புகளை திருடும் வில்லனை சரத்தின் அறிமுகப்படமான புலன் விசாரணையிலேயே பார்த்து விட்டோமே. அதில் சரத் வில்லன். இதில் ஹீரோ. மற்றபடி ஆறு வித்தியாசத்தை தேடித்தான் பிடிக்க வேண்டும்.

லாயராக வரும் நமிதா கேஸ் கட்டுக்குப் பதில் தனது தேககட்டை புரட்டுகிறார். இப்படியே போனால் எழுபது எம்எம் பத்தாது மேடம். நிரூபராக வரும் பர்ஸானா ஒவ்வொரு முறையும் தடுமாறி சரத் மீது விழுந்து ஹீரோயினுக்கான பணியை செவ்வனே செய்திருக்கிறார். நடிப்பு... ? அதை யார் கேட்டார்கள். விவேக் காமெடி என்ற பெய‌ரில் கடிக்கிறார். ‌ரிட்டையர்ட்மெண்ட் அறிவிக்கக் கூடாதா சார்?

படத்தின் ப்ளஸ் சண்டைக் காட்சிகள். அனல் அரசும், வில்லியம் ஓங்கும் ட்‌ரில் எடுத்திருக்கிறார்கள். 55வது மாடியில் நடக்கும் சண்டையையும், சேஸிங் காட்சியையும் சிரமப்பட்டு எடுத்திருக்கிறார்கள். அப்பா சரத்துக்கு ஜோடியாக வரும் ஜெயசுதா அனுதாபத்தை அள்ளிக் கொள்கிறார். மருத்துவராக சின்ன வேடத்தில் ராதாரவியும் வருகிறார்.

இசை வித்யாசாகர். பின்னணியிசை ஜோர். மலேசிய காட்சிகளில் ஒளிப்பதிவு மிரட்டுகிறது. இளம் பெண்களை அடைத்து வைத்து மிரட்டும் வில்லன் ரோகித் சாகரும், தர்மசீலனாக வரும் ரா‌ஜ்கோட்டியும் கத்தி பேசியே காதை டமாரமாக்குகிறார்கள். பாடல்களையும் சேர்த்து படத்தில் மொத்தம் ஆறு வில்லன்கள்.

படத்தில் வில்லனும், சரத்தும் சேர்ந்து சுட்டுத் தள்ளுகிறவர்களை கணக்கெடுத்தால் மலேசிய மக்கள் தொகையில் பாதி வரும். 1977 - வருடத்தைப் போலவே ரொம்பப் பழசு.

Share this Story:

Follow Webdunia tamil