படங்களைத் தயாரிப்பதில்லை என்ற சரத்குமாரின் தீர்மானத்தை மாற்றியமைத்தப் படம், 1977. டி.என். தினேஷ்குமார் சொன்ன கதையில் லயித்துப்போன சரத், 1977 படத்தை சொந்தமாக தயாரித்து நடித்துள்ளார்.
சென்னையில் நடந்த உண்மை சம்பவத்தின் அடிப்படையில் இந்தப் படம் தயாராகிறது. 1977ல் நடக்கும் ஒரு சம்பவத்தை மையமாகக் கொண்டதால் படத்துக்கு இந்தப் பெயர். பெரும் பகுதி படப்பிடிப்பு மலேசியாவில் நடந்தது படத்தின் இன்னொரு சிறப்பு.
அப்பா, மகன் என சரத்குமாருக்கு இரு வேடங்கள். அப்பா மீது ஏற்பட்ட களங்கத்தை பல வருடங்கள் கழித்து மகன் நீக்குவதே கதை. திரைப்படங்களில் நடிப்பதை தவிர்த்து வந்த முன்னாள் நாயகி ஜெயசுதா அப்பா சரத்குமாருக்கு ஜோடியாக நடித்துள்ளார். மகனுக்கு பர்ஸானா, நமிதா என இரு ஜோடிகள். நமிதா இதில் வழக்குரைஞராக நடித்துள்ளார்.
ஜேம்ஸ்பாண்ட் படப்பாணியில் படத்தை இயக்கியிருக்கிறார், தினேஷ்குமார். படத்தில் ஆறுவிதமான கெட்டப்புகளில் வருகிறார் சரத். நான்கு பகுதிகளாக திரைக்கதையை பிரித்து கதை சொல்லப்பட்டிருக்கிறது.
விவேக் காமெடி ஏரியாவை கவனிக்க, ஒரு பாடலுக்கு ஆடியிருக்கிறார் சந்தியா ஷெட்டி. வித்யாசாகர் இசை. ஆண்டனி எடிட்டிங். படத்தின் கிளைமாக்ஸை இருபது நிமிடங்கள் ஓடுவதுபோல் எடுத்திருக்கிறார்கள்.
இம்மாதம் படம் திரைக்கு வருகிறது.