தேமுதிகவிற்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி வழங்குவதாக அதிமுக உறுதி அளித்துள்ளதாகவும், வேட்பாளர் யார் என்பது குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என்றும் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா தெரிவித்துள்ளார்.
தேமுதிக தலைமை அலுவலகத்திற்கு அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இன்று வருகை புரிந்தார். கேப்டன் விஜயகாந்த் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய எடப்பாடி, பின்னர் பிரேமலதாவுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
ஆலோசனைக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா, அதிமுக கூட்டணி சார்பில் மார்ச் 24ஆம் தேதி திருச்சியில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளதாகவும், அதற்கு அழைப்பு விடுக்கவே எடப்பாடி பழனிச்சாமி தன்னை சந்திக்க வந்ததாகவும் கூறினார்.
திருச்சி பொதுக்கூட்டத்தில் தேமுதிக கண்டிப்பாக பங்கேற்கும் என்றும் 40 தொகுதிகளின் வேட்பாளர்களை பொதுக்கூட்டத்தில் அறிமுகம் செய்து வைத்து, அன்றைய தினமே பிரச்சாரத்தை தொடங்க இருப்பதாகவும் பிரேமலதா தெரிவித்தார்.
40 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி அமோக வெற்றி பெறும் என்றும் அவர் கூறினார். தேமுதிகவுக்கு ராஜ்ய சபா சீட் வழங்கப்படுமா என்ற கேள்விக்கு பதில் அளித்த பிரேமலதா, ராஜ்யசபா சீட் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், வேட்பாளர் யார் என்ற விவரம் பின்னர் அறிவிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.